மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இந்தப் பயணத்தடை மே மாதம் 30ஆம் திகதி இரவு வரை தொடரும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பல்வேறுபட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சில முடிவுகளுக்கு வந்துள்ளதாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, அனைத்து மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க, அனைத்து பொது நிகழ்வுகளையும் இரத்துச் செய்ய, கடைகளினுள் நுழையும் மற்றும் இருக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த, தொற்று வீதம் அதிகமாகவுள்ள பகுதிகளை தனிமைப்படுத்த குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், பொது மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிக்கப்படாமலிருக்க பொருத்தமான நடைமுறைகள் பேணப்பட வேண்டுமெனவும், இவற்றை நடைமுறைப்படுத்தும்போது அத்தியாவசிய சேவைகள் இடம்பெறுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.