இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் போட்டி ஒன்றில் சென்னை, பஞ்சாப் அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பவுலிங் தேர்வு செய்தார். இதனையடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.
20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை எடுத்தது. அதிரடியாக விளையாடி வந்த கெயில் 33 பந்துகளில் 63 ரன்கள் (7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) எடுத்து வாட்சன் பந்தில் கேட்ச் ஆனார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி. துடுப்பாட்டத்தின் ஒரு கட்டத்தில் 5 ஓவர்களில் சென்னை அணியின் ஸ்கோர் 46 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளாக இருந்தது. பின்னர் 6 வது ஓவரை வீசிய அஸ்வின், பில்லிங்ஸை எல்பிடபுள்யூ ஆக்கி வெளியேற்றினார்.
இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் தோனி, ராயுடு வுடன் கை கோர்த்தார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 49 ரன்கள் எடுத்திருந்த அம்பதி ராயுடு 13 வது ஒவரின் 4 வது பந்தில் ரன் அவுட் ஆகி தனது அரை சதத்தை தவற விட்டார். பின்னர் தோனியுடன் ஜடேஜா இணைந்தார். கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி வெற்றி பெற 76 ரன்கள் தேவைப்பட்டது. இருவரும் அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்த நிலையில் 17 வது ஓவரின் 5 வது பந்தில் தோனி தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
18 வது ஓவரின் 2 வது பந்தில் ஜடேஜா வெளியேறினார். தொடர்ந்து கடைசி 6 பந்தில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரில் 13 ரன்களே எடுத்த சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேப்டன் தோனி 44 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.