திரைப்படவிழாக்கள்

லோகார்னோ பியாற்சா கிரான்டே பெருந்திரையில் காண்பிக்கப்பட்ட படங்களில் பெரும் ஆர்வத்தினையும், எதிர்பார்ப்பினையும் தூண்டிய படங்களில் ஒன்றாக இருந்தது " கமிலே" (Camille). ஆயுதங்களின் அகோரப் பசிக்கு, சொற்ப வயதில் பலியாகிப்போன ஒரு இளம் பெண் Camille Lepage வாழ்வு தழுவிய உண்மைக் கதையது.

1988ம் ஆண்டு ஜனவரி 28ல், பிரான்சில் பிறந்து , 2014ம் ஆண்டு மேமாதம் 12ந் திகதி மத்திய ஆபிரிக்கக் குடியரசின் போயர் (Bouar, Central African Republic) என்ற இடத்தில் மடிந்து போன "கமிலே லேபாக் " ( Camille Lepage ),26 வயதுக்குள், ஊடகத்துறையில் பரவலாக அறியப்பட்டவராகவும், புகழினையும், விருதுகளையும் பெற்றுக் கொண்ட பத்திரிகைப் படப்பிடிப்பாளராக (Photojournalist ) திகழ்ந்தவர். அவரது பத்திரிகைத் துறைசார்ந்த வாழ்வினையும் மரணத்தினையும், Boris Lojkine, திரைப்படமாக வடிக்க, Nina Meurisse திரையில் கமீலே லே பாக்காக வாழ்ந்திருக்கின்றார்.

உன்னுடைய படங்களின் வழி நீ சொல்ல வருவதென்ன? என அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் மக்கள் துயர் சொல்பவள் எனத் தன் படங்களின் வழி பதில் சொல்லத் தொடங்கினாள் கமீலே. அதற்காக அவள் துணிவும் தன்னம்பிக்கையும் கொண்டு 2013ல் பயணித்தது மத்திய ஆபிரிக்காவை நோக்கி. " நீ திறமைசாலி. எதையும் சாதுரியமாகக் கையாளுவாய்.." என கட்டியணைத்துத் தாய் விடைகொடுக்க, வேகத்துடன் புறப்படும் அவளுக்கு, ஆபிரிக்க யுத்த களம் தருவது அதிர்ச்சியான அனுபவங்கள். அத்தனையும் தாண்டிப் பயணிக்கின்றாள்.

ஏற்கனவே அங்கு நிலைகொண்டுள்ள மூத்த பத்திரிகையாளர்களுடன் இணைந்து செயற்படுவதில் ஏற்படும் சிரமங்கள், இளம் பெண்ணாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அச்சுறுத்தல்கள், அத்தனையும் தாண்டி, அங்குள்ள துயரங்களைப் பதிவு செய்கின்றாள். ஒரு கட்டத்தில் பத்திரிகையாளர் என்பதற்கும் அப்பால், பாவப்படட்ட மக்களாக வாழும் அம்மக்களுக்கு பரிவும், உதவியும் புரியும் மனிதாபிமானியாகவும் தன்னை நிறுத்திக் கொள்கின்றாள். அதனால் அங்குள்ள மக்களுக்கும் அவளுக்கும் இடையிலான நட்பும் உறவும் வலுக்கிறது. அந்த நெருக்கத்தில் அவர்களின் நேர்மையான செயல்களை ஆதரிக்கவும், தவறுகளைத் தட்டிக் கூறவும் துணிகின்றாள். ஆத்திரமும், ஆயுதமும், வன்முறையும் மிக்க சூழலில், வேற்றினத்துப் பெண்ணாக நிற்பதற்கு அசாத்தியமான துணிவு வேண்டும். " நீ பிரான்சுக்காரி. உனக்குத் தேவையானது படங்கள். அதை எடுத்ததும் நீ திரும்பி விடுவாய். இங்கே சாவது நாங்கள் .." எனச் சீறும் ஆயுதப் போராளியிடம், " இரவு முழுக்க குடித்துக் கும்மாளமிடும் பெண்ணாக நானிருந்தால் நான் ஏன் இங்கு வருகின்றேன்.?" என எதிர் கேள்வி எழுப்பும் தைரியம் எல்லோர்க்கும் வாய்த்துவிடுவதில்லை.

தனது முதலாவது பணிக்காலத்தினை நிறைவு செய்து பிரான்ஸ் வருபவளை பத்திரிகையுலகம் கொண்டாடுகிறது. குடும்பத்திலும், வெளியிலும் அவளுக்கான தனித்துவ அங்கீகாரம் கிடைக்கிறது. தலைமைச் செய்தியாளர் பாராட்டுத் தெரிவித்த பின் அடுத்த பணிக்காக உக்ரைன் களத்துக்குச் செல்லப் பணிக்கின்றார். ஆனால் கமீலே அதை மறுத்து ஆபிரிக்க பயணத்தை விரும்புகின்றாள். ஆயுதக் குழுக்களின் அராஜகம் நிறைந்த அப்பிரதேசத்துக்குச் செல்ல வேண்டாமென அவர் சொல்லியதையும் மீறி மீண்டும் மத்திய ஆபிரிக்காவிற்குத் தனித்துப் பயணிக்கின்றாள்.

சென்ற பயணத்தில் சந்தித்த மனிதர்களின் அறிமுகத்தை, வாழ்விடத்தை தேடுகின்றாள். அது பயங்கரமானதாக இருக்கிறது. அவளது அன்பும் பரிவும், நிதானமும், அவளை நேர்கொண்டழைக்கிறது. போருக்குள் வாழும் மனிதர்களின் நேசங்களைச் சந்திக்கின்றாள். இது கமீலாவின் கதை என்று மட்டும் திரைக்தையிரனைச் சுருக்கி விடாது போருக்குள் வாழும் மனிதர்களின் வாழ்வினையும், உணர்வுகளையும், அழகாகச் சொல்லும் திரைக்கதை. விருந்தோம்பல் என்றால் என்ன என்பதைச் சொல்லி உணவு படைக்கும் ஆபிரிக்கத் தாய் முதல், அழுகை ஒப்பாரி என அத்தனையையும் காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அவளின் இறுதிப் பிரிதலை, காட்சியும், இசையும், ஒரு கவிதை போலச் சொல்கிறது.

இத்திரைப்படத்தின் இயக்குனர் Boris Lojkine இப்படிச் சொல்கிறார். Camille பற்றி தான் பத்திரிகையில் முதன் முதலாக செய்தி அறிந்த போது, Camille இன் பெற்றோரையும், சகோதரனையும் சென்று நேரடியாக சந்தித்தேன். Camille க்கு மிக அண்மையாக என்னை உணர்கிறேன். அவரை திரைப்படத்தில் பிரதிநித்துவப்படுத்த நீங்கள் அனுமதிப்பீர்களா என நேரடியாக கேட்டேன். அனுமதி கொடுத்தார்கள். எனக்கு மிக மன அழுத்தமாக இருந்த விடயம் Camille ஐ எப்படி காண்பிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு.

திரைப்படத்தின் முதலாவது பார்வையாளர்கள் Camille இன் குடும்பத்தினர். Camille அண்மையில் இறந்த பெண். அவரை எப்படி வேண்டுமானாலும் காண்பிக்க முடியாது. அவர் எப்படி இறந்தார் என்பதையோ, அவரது சடலத்தை முழுமையாக படத்தில் காண்பிப்பதோ எனக்கு அவருக்கு கொடுக்கும் மரியாதையாக தெரியவில்லை. அவரது அந்த பட பொறுப்புணர்வுதான் அவளது பிரிவினை ஒரு கவிதை போலக் காட்சிப்படுத்துகிறது.

படத்தில் எப்படி வன்முறையை காண்பிக்க வேண்டும் என்பதில் மிகுந்த அவதானமாக இருந்தேன். வன்முறையை எப்படி Camille பார்க்கிறாள் என்பதையே காண்பிக்க விரும்பினேன். வன்முறையை வலியோடும், அமைதியோடும் காட்சிப்படுத்தினால் கமீலே. அதையே திரைப்படத்தில் காண்பிக்கின்றார் இயக்குனர் Boris Lojkine. இந்த திரைப்படம் பியாற்சே கிராண்டே திரையங்கில் காண்பிக்கப்படும் போது எனக்குள் எழும் ஒரே கேள்வி Camille இத்திரைப்படத்தை நேசிப்பாளா?, என்ன அவள் யோசிப்பாள்? என்னைப் பற்றி இப்படி ஒரு அருவருப்பான படம் என்பாளா? அல்லது எனது படத்தை விரும்பியிருப்பாளா? என்பதே என் கேள்விகள் என்பதில் தெரிகிறது அவரது படைப்பின் மீதான பொறுப்புணர்வு.

இது Camille பற்றிய ஒரு சுயவலராற்றுப் படமாக பார்க்க முடியாது. இது இளைமையை பற்றிய ஒரு திரைப்படமாக எம்மால் பார்க்க முடிகிறது, இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் இயக்குனரிடம் கேள்வி எழுப்பிய போது, Boris Lojkine இப்படிச் சொல்கிறார். நானும் அப்படித் தான் பார்க்க விரும்புகிறேன். நீங்கள், வழமையாக இளைமையை பற்றி ஒரு படம் என சொல்லும் போது பொதுவாக பார்க்க முடிவது, வெறுமையாக, கூட்டமாக இருந்து புகைப்பிடித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள், அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் அவர்கள் வாழ்க்கை, வாழ்க்கையில் செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்பது போன்ற காட்சியமைப்புக்கள். ஆனால் இத்திரைப்படத்துடன், ஏதாவது ஒரு தலைமுறை இளைஞர்கள் தாங்களும் இப்படித்தான் என அடையாளப்படுத்தியிருப்பார்கள். ஏனெனில் Camille கதாபாத்திரம், «செய் அல்லது செத்துமடி» என தன் இளமைக்கும், வயதுக்கும், செய்யத் துடிப்பதற்கும் முடிச்சுப் போடத் தேவையில்ல என வாழும் கதாபாத்திரம் அது என்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏதாவது ஒரு தருணம் உங்களுக்கு கடினமாக இருந்ததா என Camille ஆக நடித்த Nina Meurisse விடம் கேட்ட போது, Camille உடன் இருந்த நிஜ புகைப்படக் காரர் ஒருவர் எமது படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்தார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போது நான் Camille ஆக நடித்துக் கொண்டிருந்தேன். உண்மை எது, புனைவு எது என்பது இடையில் இருந்த பிரிவுக் கோட்டை அது அப்படியே மங்கலாக்கிவிட்டது என்றார்.

 உங்களுக்கு Camille Lepage யார்?, அவரை நீங்கள் இப்போது எப்படி பார்க்கிறீர்கள் என Nina Meurisse இடம் கேட்ட போது, «தனக்கான ஒரு கனவு, தனது தீவிர பற்று என வாழும் ஒரு இளம் பெண், வன்முறையின் அகோரமான வெளிச்சத்தின் கீழ் சித்தரிக்கப்படும் மனிதத்தை, தனது கமெராக் கண்களில் வேறு வடிவில் காண்பிக்க முயற்சித்த பெண் அவள் என்கிறார். இக் கட்டுரைக்காகச் கமீலே குறித்துத் தேடிய போது, இந்தப் பெண் இன்னமும் வாழ்ந்திருக்கக் கூடாதா என்று எண்ணத் தோன்றியது. Camille திரைப்பட ம் பார்வையாளர்களிடம் அந்த ஏக்கத்தை கடத்திவிட்டு முடிகிறது.

- லோகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா செய்தியாளர்கள்

இத் திரைப்படம் பொது மக்கள் தெரிவாக வெற்றி பெற்றது குறித்த பகிர்வு

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.